இந்திய நிதி அமைச்சர் வந்துசென்ற மறுவாரமே யாழ்ப்பாணம் செல்லும் சீன தூதுவர்

0
90
Article Top Ad

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மாலை திருகோணமலைக்குச் சென்றிருந்தார்.

திருகோணமலையில் அவருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உட்பட அரச அதிகாரிகளால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று திருகோணமலையில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்ட இந்திய நிதி அமைச்சர் State bank of india வின் புதிய கிளையையும் திறந்துவைத்தார்.

அத்துடன், ஐ.ஓ.சி தலைமையகத்துக்கும் அவர் சென்றிருந்தார். இதேவேளை, நாளைய தினம் நிர்மலா சீதாராமன், யாழ்ப்பாணத்துக்குச் செல்ல உள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இந்நிய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில அபிவிருத்தித் திட்டங்களை நிர்மலா சீதாராமன் பார்வையிட உள்ளதுடன், இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் கட்டப்பட்டுள்ள யாழ். கலாசார மையத்துக்கும் விஜயம் செய்ய உள்ளார்.

இதேவேளை, அங்கிருந்து பலாலி விமான நிலையம் செல்லும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், விமானம் மூலம் தமிழகத்துக்குச் செல்ல உள்ளார்.

யாழ்ப்பானம் செல்லும் சீன தூதுவர்
இந்நிலையில், சீனா தூதுவர் அடுத்தவாரம் யாழ்ப்பாணத்தக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதுடன், வடக்கு மீன்பிடித்துறையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும் பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதனை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீனாவுக்கு விஜயம் மேற்கொண்ட போது மீன்பிடித்துறையை பலப்படுத்த 1500 மில்லியன் ரூபாவை சீனா மானியமாக வழங்கியிருந்தது.

வட மாகாணத்தின் மீன்பிடித்துறையில் சீனாவின் பிரசன்னம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவரும் பின்புலத்தில் வடக்கு மீன்பிடித்துறையை அபிவிருத்தி செய்ய 1500 மில்லியன் ரூபா நிதியை சீனா வழங்கியுள்ளது.

வடக்கில் சீனா கால்பதிப்பதில் இந்தியா கவலை கொண்டுள்ள போதிலும், இந்த விடயத்தில் சீனாவின் முயற்சி தொடர்கிறது.

வடக்கு, கிழக்கில் சீனாவின் பிரசன்னம் அதிகரித்துவருவது தொடர்பில் இலங்கை அதிகாரிகளிடம் இந்தியா தமது ஆட்சேபனையை பதிவுசெய்துள்ள போதிலும், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக மீன்பிடித் துறையை மையமாகக் கொண்டு சீனாவின் தலையீடுகள் அதிகரித்துள்ளன.

சீனத் தூதுவரின் இரண்டாவது யாழ். விஜயம்

சீனத் தூதுவர் கி லென்ஹோங் (Qi Zhenhong) 2021இல் வடக்கு மாகாணத்திற்குச் சென்றமை மற்றும் அங்கு மேற்கொண்டிருந்த செயல்பாடுகள் தொடர்பில், இந்தியா கவலையை வெளிப்படுத்தியிருந்தது.

சீனப் தூதுவர் மற்றும் குழுவினர் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடு நடத்தியதுடன், உள்ளூர் இந்து பாரம்பரியத்தை பின்பற்றி வேஷ்டி அணிந்து வெறும் மார்போடு நல்லூரில் வழிபட்டனர்.

யாழ்ப்பாண மக்களின் பண்பாட்டு நெறிமுறைகளை ஈர்க்கும் முயற்சியாகவே சீன குழுவினர் இவ்வாறு செயல்பட்டிருந்தனர்.

இந்தநிலையில்தான் சீன தூதுவரின் இரண்டாவது வடக்கு விஜயம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெற உள்ளது.

சீன தூதுவர் தலைமையிலான இந்தக் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாநகர சபை ஆணையாளர் ஆகியோருடன் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்த உள்ளனர்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் நலனோம்புத் திட்டங்களை சீன தூதுவர் நேரில் சென்று பார்வையிடத் திட்டமிட்டிருப்பதாகச் சீனத் தூதரக வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது.

இதேநேரம், இலங்கைக்கான சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 50 பேருக்கு மாதாந்தம் ரூபா 6,500 படி வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ். பல்கலைக் கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

வடக்கு, கிழக்கில் இந்தியாவின் ஆதிக்கம்

வடக்கு, கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் தமிழ் அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சீனா அங்கு வருவதை விரும்பவில்லை.

இந்தியாவின் நெருங்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, அதனுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடு.

ஆனால், இந்தியாவின் எதிர்ப்பை கண்டு சீனா பின்வாங்க தயாராக இல்லை. இந்த இரண்டு மாகாணங்களின் மீன்பிடித் துறையில் மேலும் முதலீடு செய்ய சீனா ஆர்வங்காட்டி வருகிறது.

அதற்காகவே அண்மையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போது, “பெல்ட் அண்ட் ரோட்“ திட்டத்தின் பத்தாம் ஆண்டு நிறைவைக் கருத்தில் கொண்டு, வடக்கு, கிழக்குப் பகுதிகளில் உள்ள மீன்பிடித் துறையினரின் நலனுக்காக சீனா ரூ.1500 மில்லியனை வழங்கியது.

இலங்கை, இந்திய மீனவர் பிரச்சினை

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைவதால் வடக்கில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. அதைத் தீர்க்க இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளின் அரசாங்கங்கள் மேற்கொண்ட முயற்சிகள் தோல்விகண்டுள்ளன.

மீன்பிடி நடவடிக்கைகளில் அதிகரித்த சீனப் பிரசன்னம் நிச்சயமாக இந்தியாவின் கவலைகளை மேலும் அதிகரிக்கும். ஆனால், இலங்கை சீனாவின் உதவிகளை எப்போதும் நிராகரிப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகும்.

சீனா வடக்கை குறிவைப்பது ஏன்?
இந்திய நிதி அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவடைந்து ஒருசில நாட்களுக்கு சீன தூதுவர் வடக்கு மாகாணத்துக்கு செல்வது இந்தியாவை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கும்.

திருகோணமலையை இந்தியா குறிவைத்துள்ள நிலையில் வடக்கை குறிவைக்க சீனா எதிர்பார்க்கிறதா என்ற கேள்வியும் சீனாவின் அண்மைய செயல்பாடுகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

நிச்சயமாக வடக்கு அரசியலில் மற்றும் பொருளாதாரத்தில் சீனாவை தலைத்துக் இந்தியா அனுமதிக்காது என்பது யதார்த்தம். ஆனால், இங்கு ஒரு பதற்றமான சூழலை உருவாக்கு தெற்கில் மேலும் பல பகுதிகளை சீனா தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்