கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் மக்களுக்கு நிவாரணம் வழங்கி வாழ்க்கையை வழமை நிலைக்குக் கொண்டு வர பிரதேச மட்ட அதிகாரிகளின் வினைத்திறனான ஒத்துழைப்பு அவசியம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
2025 டிசம்பர் 07 அன்று கண்டி உடபலாத்த பிரதேச செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவக் குழுச் சந்திப்பில், கெலிஓயா, உடபலாத்த மற்றும் தொளுவ பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் நிவாரண விநியோக பணிகளை பிரதமர் பார்வையிட்டார்.
இதன்போது, மின்சாரத் தடங்கல்கள் பெரும்பாலும் வழமை நிலைக்கு வந்துள்ளதாகவும், பிரதான வீதிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், கிராமிய வீதிகள் துப்பரவு செய்யப்பட்டு வருவதாகவும், தேவையான குடிநீர் வழங்கப்படுவதாகவும், தகவல் தொடர்பு வழமை நிலைக்கு வந்த பின்னர் வங்கிக் கடமைகள் சீரமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனை செவிமடுத்த பிரதமர், அனர்த்தத்தில் மக்களின் வாழ்க்கையும் பொருளாதாரமும் வழமை நிலைக்குக் கொண்டு வர அனைவரும் மீண்டெழும் தன்மையுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டும் எனவும், பாதுகாப்பு முகாம்களில் உள்ள குழந்தைகளின் மனநலனை சிறப்பு கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

