கனடாவின் முக்கிய ஓய்வூதிய நிதிகள் திரவ இயற்கை எரிவாயு (LNG) திட்டங்களில் முதலீடு செய்வது தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்பொன்று சட்ட எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடாவின் சுற்றுச்சூழல் செயற்பாட்டு அமைப்பான Stand.earth, பிரபல சட்ட நிறுவனத்தின் ஊடாக ஆறு முக்கிய ஓய்வூதிய நிதிகளின் நிர்வாகிகளுக்கு இந்த எச்சரிக்கைக் கடிதத்தை அனுப்பியுள்ளது.
கனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டுச் சபை (CPPIB), பொதுத்துறை ஓய்வூதிய முதலீட்டுச் சபை (PSP Investments), ஒன்டாரியோ நகராட்சி ஊழியர் ஓய்வூதியத் திட்டம் (OMERS), ஒன்டாரியோ ஆசிரியர் ஓய்வூதியத் திட்டம், பல்கலைக்கழக ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒன்டாரியோ சுகாதாரப் பணியாளர் ஓய்வூதியத் திட்டம் ஆகிய ஆறு அமைப்புகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
LNG கனடா, Ksi Lisims LNG உள்ளிட்ட பாரிய இயற்கை எரிவாயுத் திட்டங்களில் நேரடியாகவோ அல்லது தனியார் முதலீட்டு நிதிகள் ஊடாகவோ முதலீடு செய்வதைத் தவிர்க்குமாறு அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இத்தகைய முதலீடுகள் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகள், பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் நீண்டகால நிதி அபாயங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, முதலீடுகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து முறையான மற்றும் வெளிப்படையான மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாவிட்டால் ஓய்வூதிய நிதிகளின் நிர்வாகிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என சட்ட எச்சரிக்கைக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் பிளாக்ஸ்டோன் (Blackstone) தலைமையிலான முதலீட்டுக் குழுவுடன் இணைந்து நான்கு கனேடிய ஓய்வூதிய நிதிகள் LNG கனடா திட்டத்தில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்காக 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் மிட்சுபிஷி நிறுவனத்தின் LNG கனடா திட்டப் பங்குகளைக் கொண்ட துணை நிறுவனத்தில் 49.9 சதவீத பங்குகளைப் பெறுவதற்கான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முதலீட்டுத் திட்டம் தொடர்பில் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடும் கவலை வெளியிட்டுள்ள நிலையில், ஓய்வூதிய நிதிகளின் முதலீட்டு முடிவுகள் தொடர்பான சட்ட மற்றும் சுற்றுச்சூழல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதேவேளை, பொதுத்துறை ஓய்வூதிய முதலீட்டுச் சபை (PSP Investments), குறித்த முதலீடுகள் தொடர்பான அபாயங்கள் குறித்து சுற்றுச்சூழல் அமைப்பு முன்வைத்துள்ள கருத்துகளுடன் தாம் உடன்படவில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஓய்வூதிய நிதிகளின் முதலீட்டு முடிவுகள், தமக்குப் பொருந்தும் சட்டக் கடமைகளுக்கு அமைவாகவும், பயனாளர்களின் நலனைக் கருத்திற்கொண்டும் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த அமைப்பு விளக்கமளித்துள்ளது.



